தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் எழுதுகோல் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் சண்முக நாதனுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் பாரட்டு சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக கலைத்துறை வித்தகர் விருதை வசனகர்த்தா ஆரூர் தாஸ் இல்லத்திற்கே சென்று முதல்வர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் ஓதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, முனைவர் சுந்தரமூர்த்தி, பூமணி, இமையம் ஆகியோருக்கு வீடுகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.