தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? என்ற விவாதம் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் காரசாரமாக விவாதிக்கப்படுவதோடு, கருத்துக் கணிப்புகள் வெளியாவதுமாக உள்ளது. மக்களிடம் கருத்தைக் கேட்டு அதை தேர்தல் முடிவாக வெளியிடும் பல்வேறு நிறுவனங்களும் பல தொகுதிகளில் கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகிறது. அப்படி ஒரு நிறுவனம் தான் பிடிஎஃப் (PDF) எனப்படும் தனியார் நிறுவனம். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கரூர் தொகுதியில் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
கடந்த 30ந் தேதி மாலை பெரியகாளிபாளையம் என்ற ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளார்கள். அப்போது அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்நிலையில் கருத்துக் கணிப்பு நடத்திய இரண்டு இளைஞர்களைப் பிடித்த அதிமுகவினர் அவர்களிடமிருந்த செல்ஃபோனை பறித்துக் கொண்டனர். அதோடு கருத்துக்கணிப்பு நடத்திய ஃபாரங்களைப் பிடுங்கி உள்ளனர். அந்தப் பாரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு அதிக ஆதரவு இருந்திருக்கிறது. இதனால், கொதிப்பான அ.தி.மு.க.வினர் அந்த ஃபாரங்களையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுவந்த அந்த இரண்டு பேரையும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களது செல்ஃபோனை கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வாங்கல் என்ற ஊரின் எஸ்.ஐ நாகராஜ் மற்றும் வெங்கமேடு என்ற பகுதியின் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் உங்களது செல்ஃபோனை நாங்கள் வாங்கித் தருகிறோம். இப்போது அமைதியாக இருங்கள் எனக் கூறியிருக்கிறார்கள். பிறகு இரவு 12 மணி வரை காவல் நிலையத்தில் அவர்கள் இருவரையும் அமர வைத்தும் செல்ஃபோனை போலீசாரும் கொடுக்கவில்லை. அவர்களது செல்ஃபோனை உள்ளூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பவர் வைத்திருந்திருக்கிறார். இது சம்பந்தமாக கரூர் எஸ்.பியிடம் அவர்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்ஃபோனை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். மேலும் இவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் கூட வாங்க மறுத்துள்ளனர். கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு நேர்ந்ததை தேர்தல் ஆணையத்துக்குப் புகாராக அனுப்பியுள்ளார்கள்.