சிறைக் கைதிக்கு சுவரைத் தாண்டி பிரியாணி, மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆத்தூர் சிறை எஸ்.பி, முதுநிலை வார்டன்கள் உள்ளிட்ட 7 பேர் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 200 கைதிகள் வரை அடைத்து வைக்க முடியும். கொரோனா காலத்தில் பல்வேறு வழக்குகளில் கைதானவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட பிறகு, ஆத்தூர் சிறையில்தான் அடைக்கப்பட்டு வந்தனர்.
இந்தச் சிறையில் அடிக்கடி சிறை விதிகள் மீறப்படுவதாகவும், கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு, சேலம் மத்திய சிறை எஸ்.பி., கிருஷ்ணகுமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, தனி அறையில் கூடுதலாக அரிசி, மளிகை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஒருவர் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்தக் கைதிக்கு, சிறையின் வெளிப்பகுதியில் இருந்து அவருடைய ஆதரவாளர்கள் கயிறு மூலம் பிரியாணி, கோழிக்கறி வறுவல், மதுபானங்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு சிறைக்காவலர்கள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த 'சரக்கு போக்குவரத்து' விவகாரம், மற்ற கைதிகள் மூலம் வெளியே கசிந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு சிறைக்காலர்கள் மூன்று பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு உள்ளது. ஆத்தூர் காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மோசடி வழக்கில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சலுகை அளிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், திடீரென்று ஆத்தூர் சிறை எஸ்.பி., சசிகுமார் உள்ளிட்ட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி, எஸ்.பி., சசிகுமார், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முதுநிலை தலைமை வார்டன்களான சுந்தர்ராஜன் வேலூருக்கும், ராமலிங்கம் கடலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர்கள் அசோக்குமார் வேலூருக்கும், செந்தில்குமார் கடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வார்டன்கள் மாரியப்பன் கடலூருக்கும், ஜெயசீலன் வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மத்திய சிறை எஸ்.பி., கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் மத்திய சிறை தரப்பில் கேட்டபோது, ''நிர்வாக நலன் கருதி ஆத்தூர் சிறை எஸ்.பி., உள்ளிட்ட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்'' என்றனர். இந்தத் திடீர் இடமாற்றம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.