Skip to main content

சுண்டெலி வடை; அதிர்ச்சி கொடுத்த கடை உரிமையாளர்

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
Sundeli Vada; Shocked shop owner

அண்மையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட சாம்பார் இட்லியில் பல்லி கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து சென்றனர். இந்தநிலையில் இதேபோல கரூரில் கடையில் வாங்கப்பட்ட வடையில் எலி செத்துக் கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள கடம்பர் கோவில் என்ற பகுதியில் 'பாபு டீ ஸ்டால்' என்ற பெயரில் காளிதாசன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் வடை சமோசா, போண்டா உள்ளிட்டவையும் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற எலக்ட்ரீசியன் 12 மணியளவில் ஒரு போண்டாவையும், பருப்பு வடையும் வாங்கியுள்ளார்.

பருப்பு வடையை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது உள்ளே சுண்டெலி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனடியாக அதைப் புகைப்படம் எடுத்த அவர் கடை உரிமையாளரிடம் கூறியும் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மற்ற பலகாரங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த  கார்த்திக் உடனடியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதோடு நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த குளித்தலை நகராட்சி அதிகாரிகள் கண்ணாடி பெட்டியுடன் இருந்த பலகாரத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றதோடு கடைக்கு சீல் வைத்து பூட்டிச் சென்றனர்.

சார்ந்த செய்திகள்