நாகையில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில், பேரிடர் மீட்பு வீரர்கள், மீனவர்கள் பங்கேற்றனர், அவர்களின் ஒத்திகை நிகழ்வு விவரம் அறிந்திடாத பலரையும் ஓட்டம்பிடிக்கவைத்தது.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியைை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலை எனும் சுனாமியால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலில் எற்படும் மாற்றங்களை அறிய அப்போது டிரான்ஸ் மீட்டர் கருவிகள் இல்லாததால், மக்களுக்கு போதிய விழிப்புணர்வையும், எச்சரிக்கையும் அரசு வழங்க முடியாத நிலைக்கு அப்போது தள்ளப்பட்டது.
இதனை களைய கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களை எவ்வாறு காத்து கொள்வது என்பது குறித்து தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் "சுனாமி " ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சுனாமியில் அதிக உடமைகளையும், உயிர்களையும் இழந்த நாகை மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. செருதூர் மீனவ கிராமத்தில் நடைபெற்ற ஒத்திகையின்போது, சுனாமி ஏற்படும் போது கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு வெளியிடும் செய்தி அறிந்து தங்களையும், மற்றவர்களையும் எவ்வாறு காத்து கொள்வது என்பது குறித்து கடலோர பாதுகாப்பு படை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
அப்போது ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது இதையடுத்து குடியிருப்புகளில் இருந்த மீனவர்கள் அலறி அடித்துக் கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடினர். பின்னர் பேரிடர் மீட்பு படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டு சில மீனவர்களை மீட்டு முகாம்களுக்கு கொண்டு வந்தனர் இதைப்போல் குடியிருப்பு பகுதியில் சிக்கி கொண்டவர்களையும் மீட்ட மீட்பு குழுவினர் அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் மீனவ கிராமத்தில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.