Skip to main content

கரும்பு இல்லாத 'பொங்கல் தொகுப்பு' - ஏமாற்றத்தில் விவசாயிகள்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

sugarcane

 

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இதற்கான உத்தரவில், 'பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சை அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு உள்ளடங்கிய 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு துணிப்பையுடன் வழங்கப்படும். அதேபோல், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். மொத்தமுள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூபாய் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எப்பொழுதுமே பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் கரும்பு, தற்போதைய அறிவிப்பில் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2016ஆம் ஆண்டுமுதல் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டும் விவசாயிகள் இதனை நம்பி கூடுதலாகப் பயிர் செய்துள்ளார்கள். பொங்கல் தொகுப்பிற்காகத் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து 18 ரூபாய்க்கு கரும்பை (ஒரு கரும்பின் விலை) கொள்முதல் செய்துவந்தார்கள். இதனால் இந்த வருடமும் தமிழ்நாடு அரசு கரும்புகளை வாங்கும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வேதனையைத் தருவதாகவும் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் எனவும் கடலூரில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

தமிழர் திருநாளான பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது மண் பானையும் கரும்பும்தான். ஏற்கனவே மண்பாண்ட தொழில் நலிவு குறித்து மண்பாண்ட கலைஞர்கள் ஒருபக்கம் வேதனை தெரிவித்துவரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாதது, இதனை நம்பி நடவு செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்