Skip to main content

மாநில எல்லையில் திடீர் போக்குவரத்து நிறுத்தம்... அடர்ந்த வனப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Sudden traffic stop at the state border ... People walking in the dense forest!

 

தமிழக-கர்நாடக எல்லையில் முன்னறிவிப்பின்றி தமிழக பேருந்துகள் செல்ல அனுமதி மறுப்பதால் நான்கு கிலோமீட்டர் வனப்பகுதியில் நடந்தே செல்லும்  அவதிக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.

 

கரோனா இரண்டாவது அலை காரணமாக நோய் தொற்று பரவாமல் இருக்க, தமிழக- கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து 118 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்ற 23ம் தேதி இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் சென்றுவர இரு மாநில அரசுகளும் அனுமதியளித்தது. 

 

அதன் பேரில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, திம்பம், ஆசனூர், புளிஞ்சூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து துவங்கியது. அதேபோல, கேர்மாளம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள உடையார்பாளையம், கொள்ளேகால், மைசூர் செல்லும் மற்றொரு வழியிலும் பொதுப் போக்குவரத்து  நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இன்று 27 ந் தேதி காலை முதல், திடீரென சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் பேருந்துகள், தமிழக எல்லைப் பகுதியான கேர்மாளம் சோதனைச் சாவடி அருகே திடீரென நிறுத்தப்பட்டது. கர்நாடக எல்லையில் உள்ள அர்த்தநாரிபுரம் கிராமத்தில் கர்நாடக அரசின் சோதனைச் சாவடியில் அவ்வழியாக வரும் பயணிகளை கரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே பயணிகளை கர்நாடகத்தில் செல்ல அனுமதிக்கின்றனர்.

 

தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை நான்கு கிலோமீட்டர் முன்பாகவே நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டுவிட்டு திரும்பிச் சென்றுவிட வேண்டும் என எச்சரித்துள்ளனர். சோதனைச் சாவடி அருகே தமிழக வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் பேருந்து மற்றும் கார்களில் செல்வோர் நான்கு கிலோ மீட்டர் முன்பாகவே தங்களது வாகனங்களில் நிறுத்திக்கொண்டு பயணிகளை இறக்கி விடுகின்றனர். 

 

விலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் அச்சத்துடன் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சோதனைச் சாவடியை பொதுமக்கள் அடைகின்றனர். அங்கு கரோனா பரிசோதனை செய்திருந்து, அதற்குண்டான சான்றுகள் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். நாங்கள் இரண்டு தடுப்பூசி போட்டுள்ளோம் எங்களை அனுமதியுங்கள் என கேட்ட பொதுமக்களை விரட்டி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

எவ்வித முன்னறிவிப்புமின்றி பயணிகளை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து, பரிசோதனை சான்றுகளை காண்பித்தால் மட்டுமே கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்போம் என திடீரென கர்நாடக அரசு அறிவித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், எவ்வித பிரச்சினையும் இன்றி கர்நாடக மாநிலத்திற்கும் - தமிழகத்திற்கும் சென்று வரும் நிலையில், கேர்மாளம் வழியாக கொள்ளேகால் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்