அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கடைசி நேரத்தில் திடீரென்று தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு மே 8 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து, இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து மே 3 ஆம் தேதி வரை நேரிலும், எமிஸ் இணையதளம் மூலமும் விண்ணப்பம் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல், மாவட்டந்தோறும் உள்ள காலியிடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.
கலந்தாய்வின் முதல் நாளன்று, மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இடமாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்த ஆசிரியர்களும் கலந்தாய்வை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென்று மே 8 ஆம் தேதி நடக்க இருந்த இடமாறுதல் கலந்தாய்வை திடீரென்று தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “நடப்பு 2022 - 2023ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் கலந்தாய்வு சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பால் இடமாறுதலுக்காக எதிர்பார்த்து இருந்த ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.