கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நயினார் குப்பம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் கூரை வீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இவர் வீட்டில் பிடித்த தீ, காற்றில் வேகமாக பரவி அருகில் உள்ள கனகவல்லி, மணிகண்டன் மற்றும் சிலரது வீடுகளுக்கும் பரவியது.
எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருந்து 2 கேஸ் சிலிண்டர்கள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதனால் மேலும் தீ பரவியதையடுத்து வெங்கடேசன், ராசு ஆகியோரது வீடுகளும் தீக்கிரையானது. உடனடியாக அப்பகுதி மக்கள், வீடுகள் தீப்பற்றி எரியும் தகவலை உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி, திருநாவலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐயப்பன் ஆகியோர் தலைமையில் மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எரிந்த வீடுகளில் சுமார் பல லட்சம் மதிப்பிலான துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக யாருக்கும் தெரியாமல் தீ வைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.