வேலூர் மாவட்டம் ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் மழை பெய்கிறது. மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை, அலுவலக பணிகள் முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதிலும் பெத்லகேம், ரெட்டிதோப்பு, கம்பி கொல்லை, மலை கிராமங்களான நாய்க்கனேரி, பனங்காட்டுஎரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும்மென்றால் ஆம்பூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத்தான் செல்லவேண்டும். மழை பெய்யாத நேரங்களில் எந்த பிரச்சனையும்மில்லை, மழை காலங்களில் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இரண்டு சுரங்க பாதைகள் இருந்தாலும் செல்லக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி ஆங்காங்கே உடைந்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி, அந்த கழிவுநீர், மழை நீர் போக சரியான கால்வாய்கள் இல்லாமல் சுரங்கப்பாதையில் வந்து தேங்கிவிடுகின்றன. ரயில்வே சுரங்கப்பாதை நீரில் முற்றிலுமாக நிரம்பிவிடுவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தங்களது துணிகள் தண்ணீரில் நனைந்துவிடுவது ஒருப்புறம்மென்றால், துர்நாற்றம் மற்றொரு புறம்.
இதற்காகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுரங்கபாதையை தவிர்த்துவிட்டு, ரயில்வே பாதையை கடந்து செல்கின்றனர். பெரியவர்கள் ஓரளவு விவரம் உள்ளவர்கள் ரயில்வே லைனை கிராஸ் செய்து சென்றுவிடுகிறார்கள். மாணவ - மாணவிகள் ரயில்வே லைனை கிராஸ் செய்து தங்களது குடியிருப்பு பகுதிக்கு செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது.
மழை காலம் தொடங்கி அது முடியும் வரை இந்த பாதை பயன்படுத்த முடிவதில்லை என்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை பெரியதாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். மழை காலங்களில் திக் திக் மனநிலையிலேயே ரயில்வே லைனை க்ராஸ் செய்கின்றனர் மாணவர்களும், பொதுமக்களும்.