திருச்சியில் கல்லூரி நுழைவு வாயிலில் பெட்ரோல் வெடி குண்டு வீசிய மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூர் கிராமத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மைக்ரோசாப்ட் பயாலஜி மூன்றாம் ஆண்டு பயிலும் பவித்ரன் என்ற மாணவனுக்கும், பேராசிரியர் முகிலன் என்பவருக்கும் இடையே வேலை வாய்ப்பு முகாம் ஒத்திகை நிகழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவித்ரன் அங்கிருந்து வெளியேறி பேராசிரியர் முகிலன் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற போது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் பவித்திரனின் அடையாள அட்டையை பேராசிரியர் வாங்கியுள்ளார்.
இதையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பவித்ரன் இரவு சுமார் 8 மணி அளவில் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் எரிபொருள் நிரப்பிய மது பாட்டிலை தீயிட்டு கல்லூரி நுழைவு வாயில் கதவு மீது வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் புகாரின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ரன், ஜீவா, பிரதீப், உட்பட 4 மாணவர்களை தேடி வருகின்றனர். கல்லூரி மீது மாணவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.