Skip to main content

காவிரி ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் பலி

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
காவிரி ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் பலி

கரூர் சின்னஆண்டான்கோவில் ராஜாநகரை சேர்ந்தவர் முனீஸ்வரன். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவரது மகன் ராம்குமார் (வயது 20). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல வடிவேல் நகர் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சந்தானத்தின் மகன் முரளிதரன் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள். முரளிதரன் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக முரளிதரன் கரூர் வந்திருந்தார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் அருகே நெரூர் பகுதியில் காவிரி ஆற்றில் பரவலாக பாய்ந்து செல்கிறது. இதனால் ஆற்றில் குளிக்க பொதுமக்கள் சிலர் செல்ல தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ராம்குமார், முரளிதரன் ஆகியோர் தனது நண்பர்களான அரிக்காரன்பாளையம் தனுஷ், ரெட்டிப்பாளையம் கண்ணதாசன், ஆத்தூர் பிரதிப்ராஜ், சுபாஷ் ஆகியோருடன் நேற்று காலை நெரூரில் அக்ரகாரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது பகல் 12.30 மணி அளவில் ராம்குமார், முரளிதரன் ஆகிய 2 பேரும் ஆற்றில் குளித்த போது புதைமணலில் சிக்கினர். இதனை கண்ட அவரது நண்பர்கள் அபாய குரல் எழுப்பினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஓடி வந்து புதை மணலில் சிக்கிய 2 பேரையும் மேலே தூக்கினர். ஆனால் ராம்குமார், முரளிதரன் ஆகிய 2 பேரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதமாகி ராம்குமாரும், முரளிதரனும் இறந்த சம்பவம் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 2 பேர் பலியானது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களுடன் குளித்த சக நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்