பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஐஐடியில் இருந்து புற்றுநோய் மையத்துக்கு சென்றபோது ஐஐடி மாணவர்கள் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள், தமிழ் அமைப்புகள் வீடுகள், கட்சி அலுவலகங்கள் என பல இடங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், கறுப்பு பலூன்களை பறக்க விட்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடியின் பயணத் திட்டம் முழுவதும் வான் வழியாகவே அமைக்கப்பட்டிருந்தது. திருவிடந்தை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை ஐ.ஐ.டி-க்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர், அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு காரில் செல்வது மட்டுமே சென்னையில் பிரதமர் மோடியின் தரை மார்க்க பயணமாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி பிரதமர் நரேந்திர மோடி அடையாறு புற்றுநோய் மையத்துக்கு காரில் சென்றபோது ஐஐடியில் மாணவர்கள் சிலர் கறுப்பு கொடியை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.