மதுரை நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வு மன்றம், முத்தமிழ் மன்றம் சார்பில் தொல்லியல் கள ஆய்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மாரீஸ்குமார் தலைமை வகித்தார். மாணவி அபர்ணா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் கரிக்கோல் ராஜ், கல்லூரி தாளாளர் ஜெயக்குமார், கல்லூரி பொருளாளர் பாண்டியன், கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, “100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் கட்டடங்கள், அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொருட்கள் பரவிக் கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை தொல்லியல் சின்னங்கள் ஆகும். மாணவியர், அழிந்து போகும் நிலையில் தங்கள் பகுதிகளில் உள்ள இத்தகையவற்றை கள ஆய்வு மூலம் தேடி கண்டறிந்து ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். மாணவப் பருவத்திலேயே நம் பண்பாடு தொடர்பான தேடலை மாணவிகள் கற்றுக் கொண்டால், அது எதிர்கால வாழ்வை வளமாக்கும். தேடலே கள ஆய்வுக்கு அடிப்படை” என்று பேசினார்.
மேலும், கள ஆய்வு செய்யும் முறை, அதைப் பதிவு செய்து ஆவணமாக்குதல் பற்றியும் கூறினார். மாணவிகளுக்கு கல்வெட்டுகளைக் கண்டறிய அதன் எழுத்துகளை அறிமுகப்படுத்தி படிக்க கற்றுக் கொடுத்தார். மாணவி கணியா நன்றி கூறினார். மாணவி அபிநயா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் பாண்டிச்செல்வி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் செய்திருந்தனர்.