மதுரையில் இன்று காலை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் படியில் நின்று பயணித்தார். இந்நிலையில் அவர் திடீரென தவறி கீழே விழுந்து பலியானார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இன்று(29/8/2022) மதுரையில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது.
படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள் என்று யார் கூறினாலும் மாணவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. என்னதான் தீர்வு என்று பார்த்தால் பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்லும் நெருக்கடியான காலை மாலை நேரங்களில் அதிக பேருந்தினை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக கூட்டங்கள் பேருந்தில் ஏறுவதனை தடுக்க வேண்டும்.
அதிக கூட்டம் ஏறினால் அரசுக்கு வருமானம் என்று எண்ணாமல் உயிர் போகும் ஆபத்தினை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து துறை கருத வேண்டும். மேலும் பேருந்தில் பாதுகாப்பிற்காக கதவுகள் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மகனை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு தினமும் ‘படிக்கட்டில் பயணிக்காதீர்’ என்று அறிவுரை கூற வேண்டும்.
மாணவர்களே தயவுசெய்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்களை இழந்த பிறகு உங்கள் பெற்றோர் நடைப் பிணமாகவே வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.