Skip to main content

கோயில் கட்டடக்கலை அமைப்பைக் கண்டு வியந்த மாணவர்கள்!

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

Students marvel at the temple architecture!

 

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி கோயில்களின் கட்டடக்கலை அமைப்பைக் கண்டு கல்லூரி மாணவர்கள் வியந்தனர் . 

 

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகமும், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து பழந்தமிழர் கட்டடக்கலை என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கத்தை நடத்தினர். 

 

கல்லூரியில் நடந்த முதல் நாள் நிகழ்வில் உதவிப் பேராசிரியர் ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அ.செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது வாழ்த்துரை வழங்கினார். அருங்காட்சியகக் காப்பாட்சியர் வி.சிவக்குமார் அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம், அதன் வகைகள் பற்றி கூறினார்.

Students marvel at the temple architecture!

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பழந்தமிழர்களின் கட்டடக்கலை மரபு புதிய கற்காலம், பெருங்கற்காலத்தில் தொடங்கி கோயில்களாக வளர்ந்து வந்த விதம், ஆறு அங்கங்களுடன் அமையும் கோயில் விமானம், அதன் உறுப்புகள், தளங்களின் அமைப்பு, இஸ்லாமிய, கிறித்துவ, ஜைன மத கட்டடக்கலை ஆகியவற்றை படங்கள் மூலம் விளக்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரா.பாக்கியராஜ் நன்றி கூறினார். 

 

இரண்டாம் நாள் நிகழ்வில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடியில் உள்ள பழங்காலக் கோயில்களுக்கு மாணவர்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கோயில் கட்டடக்கலை அமைப்பு பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு விளக்கமளித்தார். பின்னர் கல்வெட்டுகளை படி எடுக்கும் வழிமுறைகளை செயல் விளக்கமாக செய்து காட்டினார். திருப்பாலைக்குடி கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டை மாணவ, மாணவியர் படித்து அறிந்து கொண்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்