தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய்த் தொற்றின் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல், முதற்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வுகளைக் கருத்தில்கொண்டு இவ்விரு பிரிவு மாணவர்களுக்காக தற்போது வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. எனினும், பள்ளிக்கு வருவது மாணவர்கள், பெற்றோர்களின் சொந்த விருப்பத்தைப் பொருத்தது என்றும் பள்ளிக்குவரும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்கு கிருமிநாசினி, வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளிவரும் மாணவர்களுக்கு கரோனா குறித்தான விழிப்புணர்வு, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது குறித்தான அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கி மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கின்றனர்.