கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்துள்ள உதயமாம்பட்டு கிராமத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களும், அந்த பகுதியில் இருந்து பணிக்கு செல்பவர்களும் இந்த வழித்தட பேருந்தையே அதிகம் பயன்படுத்த வேண்டும். இதனால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் இருக்கும். அதன்படி நேற்று, வழக்கம்போல் அதிக கூட்டத்தை ஏற்றிவந்த பேருந்து உதயமாம்பட்டு பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளது.
அங்கே அதிகமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவன் ஒருவன் கோபத்தின் காரணமாக திடீரென ஆவேசம் அடைந்து கீழே கிடந்த தேங்காய் மட்டையை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளான். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. பஸ் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். பிறகு தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், ‘அதிக அளவு கூட்டம் பேருந்தில் இருந்ததால் நிற்காமல் சென்றதாக கூறியுள்ளனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் கூடுதல் பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பஸ் கண்ணாடியை உடைத்த மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.