
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் மோகன். இவர் ஆட்சியராக பணியேற்றுக்கொண்டதுமுதல் மருத்துவமனைகள், நகராட்சி தெருக்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தூய்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துவதோடு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரப் பணிகளை முடிக்கிவிடுகிறார். அதேபோன்று திண்டிவனம் நகரத்திற்குச் சென்று பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து அதிரடி உத்தரவுகளை அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தாலுகா பனமலை கிராமத்தில் வசித்துவரும் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (15) என்பவர் தனது பள்ளி படிப்புக்காக சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் கேட்டு விக்ரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், அன்னியூர் வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என பல்வேறு அதிகாரிகளை சந்தித்து சான்று கிடைப்பதற்காக அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவருக்கு சான்றிதழ் மட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று (27.06.2021) இரவு சுமார் 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களின் செல்ஃபோன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் மேற்படி சான்றிதழ் பெறுவதற்காக தான் மிகவும் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மோகன் ஒருமணி நேரத்தில் மாணவி மகாலட்சுமிக்கு டிஜிட்டல் முறையில் ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். இதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த மாணவி மகாலட்சுமியும் அவரது பெற்றோரும் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் அவரைப் போன்று மாவட்டத்தில் பலரும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, சான்றிதழ் கிடைக்க வழி செய்யாமல் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தில் இதேபோன்று நிறைய பேர் அலைந்து திரிந்துவருவதாகவும் அப்படிப்பட்டவர்களுக்கு விரைந்து சான்றிதழ் கிடைக்க அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதேபோல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். பலர் சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்துள்ளனர். அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருமணி நேரத்தில் சான்றிதழ் கிடைக்க வழிசெய்த மாவட்ட ஆட்சியர் மோகனின் அளப்பறிய செயலைக் கண்டு அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.