புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள காரணியானேந்தல் பகுதியைச் சேர்ந்த பஷீர்அலி - சபுராம்மாள் இவர்களின் மகன் சிபிர்கான் (13). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸின் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் மாணவன் சிபிர்கான் வருகின்ற ரம்ஜான் பண்டிகைக்காக, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த தொகை ரூ4,862 யை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின்லூதர்கிங் அவர்களிடம் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து மாணவனின் சொந்த ஊரான காரணியேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கே அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர், வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று மாணவனிடம் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பொது நிவாரண நிதிக்குப் பெற்றுக்கொண்டனர். அப்போது மாணவரைப் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கரோனா நிதிக்கு வழங்கிய சம்பவம் அனைவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அப்பகுதியில் மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.