அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வாரியங்காவல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தென்றல். இவர் ஜெயங்கொண்டம் நகரிலுள்ள பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினசரி பள்ளிக்கு அவரது ஊரில் இருந்து அரசு பஸ்சில் சென்று வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு குடிப்பதற்கு வரும் மது பிரியர்களின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக உள்ளது. மது பிரியர்களின் அருவருப்பான பேச்சுகள், குடித்துவிட்டு ஆங்காங்கே ஆடை விலகிய நிலையில் அலங்கோலமாக படுத்துக்கிடப்பது போன்ற செயல்கள் மாணவி தென்றலின் படிப்புக்கு இடையூறாக இருந்துள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் மது பிரியர்கள் பேசும் அருவருப்பான பேச்சுக்கள் செய்கைகள் மாணவியை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. தனது குடும்பத்தினரிடம் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றுவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுள்ளார் மாணவி தென்றல். அரசாங்கமே மதுக்கடையை நடத்துகிறது இதை அப்புறப்படுத்துவதற்கு நம்மால் முடியாது, அதிகாரிகள் அதற்கு உடன்பட மாட்டார்கள் நம் குடும்பத்தினர் மட்டும் இதற்காக போராடினால் அது நேரம் விரயமாகும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து மாணவி தனது தாத்தா வேலுச்சாமியை துணைக்கு அழைத்துக்கொண்டு நேற்று அரியலூர் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளார்.
அந்த மனுவில், தங்கள் வீட்டுக்கு அருகில் மதுக்கடை இருப்பதால் தனது படிப்பு கெடுவதோடு மது பிரியர்களின் அருவருப்பான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல எங்கள் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி பிள்ளைகளின் படிப்பு பாழாகிறது. மேலும் பெண்கள் அந்த பகுதியில் நடமாட முடியவில்லை. எனவே அந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பள்ளி மாணவி மதுவினால் பாதிக்கப்பட்ட கடையை அப்புறப்படுத்த ஒரு குக்கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தகவல் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரோனா பரவல் காரணமாக ஆட்சியரிடம் நேரில் மனு கொடுக்க முடியாத நிலையில் அங்கிருந்த புகார் பெட்டியில் மனுவை செலுத்திவிட்டு தாத்தாவுடன் புறப்பட்டுச் சென்றார்.