விழுப்புரம் நகரில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி, பி.ஏ, பி.காம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவிகளால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொண்டங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற மாணவியின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது தாய்மாமன் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று கல்லூரி அலுவலகம் முன்பு தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து மாணவியின் தாய் தமிழ்ச்செல்வி போலீசாரிடம் கூறுகையில், “என் மகள் பிரவீனா, பிளஸ் டூ பாடத்திட்டத்தில் 331 மதிப்பெண் பெற்றுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த எனது மகளுக்கு இட ஒதுக்கீட்டின் படி சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், மற்றும் திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தோம். எந்தக் கல்லூரியிலிருந்தும் சேர்க்கைக்கான அழைப்பு வரவில்லை. விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஆர் கல்லூரியில் சீட்டு கேட்டு ஒரு மாதமாக அலைகிறோம். இதோ, அதோ என்று எங்களை அலைக்கழிக்க விட்டனர். இறுதியில் என் மகளுக்கு சீட்டு இல்லை என்கிறார்கள்.
ஆனால், என் மகளை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மெரிட் அடிப்படையில் பலருக்கும் சீட்டு ஒதுக்கப்படவில்லை. விருப்பு வெறுப்பு அடிப்படையில் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விவரம் கேட்டபோது, “அரசு அனுமதி அளித்த இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டு விட்டன. கூடுதல் இடங்கள் ஒதுக்குமாறு கேட்டு உயர் கல்வித்துறைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அந்த இடத்திற்கு சேர்க்கை நடத்தப்படும்” எனக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு கலைக் கல்லூரியில் சீட்டு கிடைக்காத காரணத்தினால் மாணவி ஒருவரின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.