Skip to main content

போராட்டம் வெடிக்கும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
er eswaran

தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலக்குமானால் இனி தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி காவிரியில் 50,000 கன அடிக்கு மேலான நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருப்பதால் வேகமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில நாட்களுக்குள் மேட்டூர் அணை நிரம்ப போகிறது. 
 

 

 

அதேபோல் தமிழகத்தில் நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையும் ஓரிரு நாட்களில் நிரம்ப போகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பி வழியும் போது திறந்துவிடப்படும் உபரிநீர் கடலில் கலக்காமல் தேக்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது. 
 

தமிழகத்திற்கு வருடத்திற்குவருடம் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றும் அளவிற்கு அதிகப்படியான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் கிடைக்கும் தண்ணீரை ஆக்கப்பூர்வமான கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தின் தண்ணீரை தேவையை வறட்சி காலங்களில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். 
 

 

 

இதுபோன்ற காலங்களில் தான் அகலப்பாதாளத்திற்கு சென்றிருக்கும் நிலத்தடிநீரை உயர்த்த முடியும். அவினாசி – அத்திக்கடவு திட்டம் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் குளம், குட்டைகளை நிரப்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திருக்க முடியும். 
 

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய உடன் திறக்கப்படும் தண்ணீரும் வீணாக கடலில் தான் கலக்க போகிறது. கிடப்பில் போடப்பட்ட திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டங்கள் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் நிரப்பி நிலத்தடிநீரை செறிவூட்டிருக்க முடியும். காவிரி தண்ணீரை கர்நாடக அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது என்ற நிலையில்தான் நாளுக்குநாள் வெளியேற்றப்படும் உபரிநீரை அதிகப்படுத்தி வருகிறது. 
 

வறட்சி காலங்களில் தண்ணீருக்காக தமிழக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கிறோம். ஆனால் அதிகமான தண்ணீர் கிடைக்கும் சமயங்களில் அதை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் கிடப்பில் போடப்பட்டுள்ள அவினாசி – அத்திக்கடவு, திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தமிழக அரசு எடுப்பதாக தெரியவில்லை. தண்ணீருக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலந்தால் இனி போராட்டம் நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Next Story

பா.ஜ.க அண்ணாமலைக்கு கொ.ம.தே.க ஈஸ்வரன் சவால்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

BJP's Annamalai is challenged by the Kongu Easwaran

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்து போனால் அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வைக்க வேண்டும்; அதன்படி தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 27 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருந்தது. 

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே அங்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறதா? அதிமுக கூட்டணியில் மீண்டும் தமாகா சார்பாக போட்டி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்களா? என்பதெல்லாம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. திமுக - அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் யாருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படப்போகிறது என்பது இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

 

இந்நிலையில் ஈரோட்டில் இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும். 

 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்.” என்று சவால் விடுத்துள்ளார். மேலும், அ.தி.மு.க பற்றி கூறும்போது, “அவர்களின் கட்சிக்குள் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் உள்ளனர்” என்று அவர் கூறினார்.