நெடுவாசலில் வாழை இலையில் மண் படையல் வைத்து போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்த்தை மத்திய அரசு அறிவித்து அன்று முதல் நெடுவாசல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போராட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளது.
பிப்ரவரி 16ந் தேதி தொடங்கிய முதல்கட்ட போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திட்டம் வராது என்று சொல்லி நிறுத்த சொன்னதால் மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதியை நம்பி 22 நாட்கள் நடந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆனால் அதையடுத்து மத்திய அரசு ஒப்பந்த நிறுவனத்துடன் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12ந் தேதி மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கியது. நாடியம்மன் கோயில் திடலில் தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் கவணத்தை ஈர்க்கும் நூதன போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அரசுகளோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை.
118 நாட்களாக போராட்டம் நடக்கிறது. ஒரே ஒரு முறை மட்டும் வந்த மாவட்ட வருவாய் அலுவலரையும் மக்கள் திருப்பி அனுப்பிய பிறகு எந்த அதிகாரியும் வரவில்லை. 118 வது நாள் போராட்டத்தில் வாழை இலையில் மண் படையலிட்டு அதை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
- இரா.பகத்சிங்