கடலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கை பின்வருமாறு,
1. கரோனா வைரஸ் தொற்று காலத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு முகக் கவசம், கிருமி நாசினி, கையுறை போன்ற வைரஸ் எதிர்ப்பு சாதனங்கள் வழங்காததை கண்டித்தல்.
2. வைரஸ் தொற்றாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் டோக்கன்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய மதுரை, திருவள்ளூர், திருத்தணி மாவட்டங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க கோருதல்.
3. அனைத்துத் துறைகளின் கரோனா முன் களப்பணியாளர்களுக்கு அறிவித்தது போல் நியாய விலைக்கடை பணியாளர்களையும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்த்தல்.
4. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100% வழங்குதல்.
5. குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்,
6. இடைநில்லா பயணச்செலவு வழங்குதல்.
7. முன் களப்பணியாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கல்,
8. நியாயவிலை கடைகளுக்கு சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்,
9. சாலை விபத்தில் பலியான பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்.
10. காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்புதல்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாய விலைக்கடை பணியாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
மேலும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி என மாவட்ட, வட்டார தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.