சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி இன்று (டிச.18) 10- வது நாளாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013-ம் ஆண்டு முதல், அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகு, மாணவரிடம் அரசு கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல்வேறு விதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள், இன்று இரவு (டிச.18) 10- வது நாளாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை அறவழியில் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று 'ஷோக்காஸ்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது குறித்து மருத்துவ மாணவர்கள் கூறுகையில், நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக ஓய்வு நேரத்தில் தான் போராட்டங்களை நடத்தி வருகிறோம் என்றனர்.