கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் மேல மூங்கிலடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு குழுவுக்கு ரூபாய் 40 என்றும் மற்றொரு குழுவுக்கு ரூபாய் 100 என்றும் இருவிதமான கூலி கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய கூலியை வழங்கக்கோரியும் நூறு நாள் வேலைத்திட்ட பணியில் பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தியும், தடையின்றி குடிநீர் கிடைக்க வலியுறுத்தியும் புவனகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சதானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சட்டக்கூலி வழங்க கோரியும், சுத்தமான குடிநீர் வழங்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.