வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,
''இந்தி, இந்தியா இதை கட்டமைப்பதுதான் இவர்கள் எண்ணம். அதற்கு ஏற்ப ஒரு கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார்கள். மூன்றாவது மொழியாக இந்தி படிப்பது மூலமாக தேசிய ஒருமைப்பாடு உருவாகும் என்கிறார்கள். கவிஞர் கபிலன் எழுதிய கவிதை போல 'அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் பிளவு வரும்' என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடு பிறக்கும். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரறிஞர் அண்ணா சொல்லியது போல ஒரு மொழியால் எப்படி தேசப்பற்று வரும். இந்தியை நாடெங்கும் படிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என சொல்லும் நீங்கள் தமிழை நாடெங்கும் படிக்க வேண்டும் என சொல்வீர்களா சொல்லுங்களே பார்ப்போம். மத்திய அரசிற்கு வரலாறு என்றாலே வட இந்தியர் வரலாறுதான். வரலாறு என்றால் வல்லபாய் பட்டேல்தான் அவர்களுக்கு ஞாபகம் வரும், நமது வ.உ.சிதம்பரனார் ஞாபகத்திற்கு வருவாரா? வீரப்பெண்மணி என்றால் அவர்களுக்கு ஜான்சி ராணியை தான் சொல்வார்கள் வேலுநாச்சியாரை சொல்வார்களா? என்ன பேசியிருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.