காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் சந்திக்கிறார். அப்போது அமைச்சர் துரைமுருகன் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் நிலை குறித்து பேச முடியாது.அதே போன்று கர்நாடகத்திற்கு சென்றும் காவிரி குறித்து பேச முடியாது. அவ்வாறு பேசுவதும் சட்டப்படி தவறு. காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு, அதன் பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளைச் சந்திப்பேன்” என் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.