தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு, நேற்று காவல் துறை சம்பந்தமான ஆய்வு கூட்டத்தை விழுப்புரத்தில் நடத்தினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முறையே சக்தி கணேஷ், ஸ்ரீ நாதா, செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சைலேந்திரபாபு, “தமிழகத்தைப் பொருத்தவரை ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, ஒவ்வொரு காவல் சரகம் வாரியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஒழுங்கு பராமரிப்பு குறித்த்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சில தினங்களாக நடைபெற்று வரும் கஞ்சா வேட்டையில் போலீசாரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் பழைய வாகனங்களை உடனுக்குடன் பொது ஏலம் விட்டு அதன் மூலம் வரும் வருவாயை அரசுக்கு செலுத்தி வருகிறோம். விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை பொருத்தவரை இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.
சமீபகாலங்களில் பாலியல் குற்றங்களில் பாதித்தவர்களின் உறவினர்கள் கூட முன் வந்து காவல்துறையிடம் புகார் கொடுக்கவில்லை. சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் தகவலின்பேரில் அவர்களே முன்வந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். போலீசாருக்கு சிறந்த திட்டங்களுக்கான அறிவிப்புகள் காலப்போக்கில் வரும். குற்றவாளிகளுக்கு காவல்துறையில் உள்ள யாராவது துணையாக இருந்தால் அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி மூன்று கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா சம்பந்தமாக 1237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 1721 பேர் கைது செய்யப்பட்டனர். 180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
சென்னை புறநகர்ப் பகுதியில் குற்றவாளிகளுடன் சில காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களை கூண்டோடு களையெடுத்து அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காவல்துறையை சேர்ந்தவர்கள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளனர் அவளுடைய நடவடிக்கை எப்படி என்பது குறித்து தொடர் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக நடவடிக்கையும் எடுத்து வரப்படுகிறது.
பாலியல் குற்றம் உட்பட அனைத்து வழக்குகளிலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எந்த இடத்தில் ஏற்பட்டாலும் உடனடியாக அந்த இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.