Skip to main content

'எங்களுக்கு கேட்க வேண்டிய நேரத்திற்கு கேட்கின்ற வலிமை வரும்'-திருமாவளவன் பேட்டி

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
nkn

'எந்த நேரத்தில் எதைக் கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள் தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம்' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

கும்பகோணத்தில் செய்தியாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். திமுக கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள கட்சிகள். காங்கிரஸ் நூற்றாண்டு கண்ட கட்சி.  அதுபோல  கம்யூனிஸ்ட் நூற்றாண்டு தொட்டிருக்கின்ற கட்சி. இரண்டு கட்சிகளுமே ஒரு நீண்ட நெடிய அனுபவம் உள்ள கட்சிகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நூற்றாண்டை தொட்டுவிட்டது. எனவே கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், எந்த கோரிக்கையை வைக்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கும் தெரியும், கம்யூனிஸ்டுகளுக்கும் தெரியும், காங்கிரஸ்க்கும் தெரியும்.

திமுக கூட்டணிக்குள் பேச வேண்டிய அரசியலை கூட்டணிக்கு வெளியே இருப்பவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல. அது அவர்களுடைய சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியல். டெல்லியில் இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகள் அல்லது ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக, அதிமுக இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க இயலாத நிலையில் மக்கள் ஆதரவைப் பெற்று இருக்கிறார்கள் என்பதுதான் இதற்குப் பொருள்.

இந்த அடிப்படையை உணராத இயக்கம் அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1999-ல் முதன்முதலாக தேர்தல் அரசியலில் அடி எடுத்த பொழுது நாங்கள் வைத்த முழக்கம் 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்பதாகும். அந்த விழிப்புணர்வு இல்லாத இயக்கம் அல்ல விசிக. எங்களுக்கு அந்த விழிப்புணர்வு இருக்கிறது என்றால் நூற்றாண்டை கடந்த காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது தெரியாத செய்தி அல்ல.

எங்கள் ஓட்டை வாங்கிக் கொண்டீர்கள். அதனால் கூட்டணி ஆட்சியில் அதிகாரம் வேண்டுமென்று கேட்கத் தெரியாதவர்கள் அல்ல நங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதுபற்றி தெரியாது என்று சிலர் கருதுகிறார்களா என்று தெரியவில்லை. எந்த நேரத்தில் எதைக் கேட்க வேண்டும் எப்படிக் கேட்க வேண்டும், அதற்கான காலம் கனிந்திருக்கிறதா என்பதை எல்லாம் அறிந்தவர்கள் தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு கேட்க வேண்டிய நேரத்திற்கு கேட்கின்ற வலிமை வரும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்