மழை வெள்ளப் பாதிப்புகள், மறுசீரமைப்புகள் மற்றும் சேத மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, "கடலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள சேதமடைந்த வீடுகள், கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பை எவ்வித விடுதலுமின்றி மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை சார்ந்த அனைத்து அலுவலர்கள் கூட்டாக ஆய்வு செய்து பயிர் பாதிப்புகளை உறுதிசெய்துகொள்ள வேண்டும். நிவாரணம் பெறும் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யும்போது உண்மைத்தன்மை இருக்க வேண்டும். பயிர் சேதக் கணக்கெடுப்பு பணிகளைக் கூடுமானவரை சாகுபடிதாரர்கள் முன்னிலையில் மேற்கொள்ளவேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகள் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் தூவி நோய்ப் பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறை மூலம் டெங்கு கொசு பரவலைத் தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்துகளைத் தெளித்து தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்துத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடை பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். பொதுப் பணித்துறையினர், கன மழையால் சேதமடைந்த சிறு பாலங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாகச் சரி செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் கங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், சார் ஆட்சியர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தாச்சலம் பிரவீன்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.