கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற கல்வீச்சு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நினைத்த நிலையில் போராட்டம் கட்டுக்கடங்காததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அங்கு இருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மேலும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் டி.ஐ.ஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ''அனைத்து விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கிறது. நடந்த சம்பவங்கள் குறித்து அனைத்து விசாரணையும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாணவி எழுதி வைத்த கடிதம் கூட கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் பொழுது போராட்டம் என்கின்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூட வளாகத்தை தாக்குவது, காவல் வாகனத்தை தாக்குவது, காவல்துறையினரை தாக்குவது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு ஆதாரங்களுடன் பிற்காலத்திலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். எனவே போராட்டம் செய்பவர்கள் உடனடியாக வன்முறையை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம்.
சம்பவ இடத்தில் ஏற்கனவே 350 காவலர்கள் இருக்கிறார்கள். பக்கத்து மாவட்ட காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் இன்னும் 500 பேர் கூடிய சீக்கிரம் போய் சேர்ந்து விடுவார்கள். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக்கண்ணன் தலைமையிலும் போலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே உடனடியாக வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.