புதுக்கோட்டையில் வயல்வெளியில் தூக்கி வீசப்பட்ட கற்சிற்பங்கள் எங்கிருந்து யாரால் கொண்டு வந்து கொட்டப்பட்டது என்ற கேள்வி கிராம மக்களிடம் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் - பூங்குடி சாலையில் திருப்பணி செய்யப்படும் கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகே வயல் வெளியில் நேற்று மதியத்திலிருந்து 29 கல் கலை பொருட்கள், சிற்பங்கள் கிடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் கிராமத்திலிருந்து பூங்குடி செல்லும் சாலை ஓரத்தில் குதிரை, சிங்கம் சிற்பங்களுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் தூண்கள், தண்ணீர் குடம், பெரிய வளையம் போன்ற 29 கலைப் பொருட்களை நேற்று மதிய வேலையில் லாரியில் கொண்டு வந்து இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வளவு அழகான கல் கலைப் பொருட்கள் பெரிய கோடிஸ்வரர்கள் வீடு அல்லது சுற்றுலா பயணிகளை கவரும் விடுதிகளில் வைக்கப்பட்டிருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சில சிற்பங்கள் கோயில்களில் இருந்திருக்கலாமோ என்றும் கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் அதிக வேலைப்பாடுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்களை ஏன் இப்படி கொண்டு வந்து வயல்வெளியில் கொட்டினார்கள்? இந்த பொருட்களை வாங்கி வைத்திருந்தவர்கள் கொண்டு வந்து கொட்டினார்களா அல்லது இது போன்ற கலைப் பொருட்களை திருட்டுத்தனமாக வாங்கி வைத்திருந்து சிலை கடத்தலில் சிக்கிக் கொள்வோம் என்று கொண்டு வந்து கொட்டினார்களா? என்ற கேள்வியும் கிராம மக்களிடம் எழுந்துள்ளது.
மேலும் அருகில் கைலாசநாதர் கோயில் திருப்பணிகள் நடப்பதால் இந்த கலைப் பொருட்களை திருப்பணிக்கு பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் கொண்டு வந்து கொட்டி இருப்பார்களா என்று பல வகையில் பேசப்படுகிறது.
இந்த கல் கலை பொருட்களை தூக்கி வீசியவர்களை கண்டறிந்து விசாரணை செய்வதுடன் அவர்களுக்கு தேவையில்லை என்னும் போது கைலாசநாதர் கோயில் திருப்பணிக்கு தேவையான சிற்பங்களை கொடுத்துவிட்டு மீதி சிற்பங்கள், தூண்களை அரசு அதிகாரிகள் கைப்பற்றி அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் இந்த சிற்பங்களின் காலம் பற்றியும் அறிய ஆய்வாளர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகிறது.