திண்டுக்கல்லில் காணாமல் போன 105 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் யார் கையில் உள்ளது என கண்டறிய ஐஎம்இஐ நம்பரை கொண்டு விரைந்து கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் பேரில் திருடப்பட்ட செல்போன்களை பயன்படுத்திய நபர்களிடமிருந்து செல்போனை மீட்கும் பணிகளை துவங்கியது.
இந்த விசாரணையில் சிலர் கீழே கிடந்த செல்போன்களை எடுத்து பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் குறைந்த விலைக்கு செல்போன் கிடைப்பதாக வந்த விளம்பரங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனை வாங்கியதாக தெரிவித்தனர். சிலர் தாங்கள் வைத்திருப்பது திருட்டு செல்போன் என்றும் எங்களுக்கே தெரியாது என்பதையும் வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 105 திருட்டு செல்போன்களையும் மீட்ட போலீசார் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.