Skip to main content

குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!

Published on 24/01/2018 | Edited on 24/01/2018
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!



பாளையை ஒட்டியுள்ள மேலப்பாளையம், முஸ்லிம், மற்றும் இதர சமூகப் பொது மக்களைக் கொண்ட நெருக்கமான பகுதி. அங்கேயுள்ள தெற்குப் பகுதியில் நாற்பது ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு இது வரையிலும் குடிமனைப் பட்டா அரசு வழங்கியதாகத் தெரியவில்லை. பல தடவை அப்பகுதி மக்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை இல்லாமல் போனது.

இந்நிலையில் மேலப்பாளையம் தெற்குப் பகுதி குடியிருப்போர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ரசூல்மைதீன் நாகூர்கனி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். அதோடு கோரிக்கை மனுவையும் அளித்தனர். அவர்கள் சார்பில் பேசியவர்களோ,



மேலப்பாளையம் பகுதிகளில் கமிட்டி நிர்வாகத்தினர் அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் பெயர் மாற்றம், மற்றும் என்.ஓ.சி., போன்ற அத்யாவசிய காரணங்களுக்காக பணம் வசூல் செய்வதைத் தடுக்க வேண்டும். வக்பு வாரியம் மூலம் சிறப்பு அதிகாரியை நியமித்து ஆய்வு நடத்த வேண்டும் 40 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் மக்களின் ஜீவாதார உரிமையைப் பாதுகாத்து, அவர்கள் அனைவருக்கும் அரசு தனிப் பட்டா வழங்க வேண்டும் என்று எங்களின் கோரிக்கையை மனுவாகக் கொடுத்திருக்கிறோம் என்றார்கள்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் குடியிருப்பு சங்க நிர்வாகிகளான சேக், நாகூர், ரவி அலாவுதீன், இப்ராகிம் மாலிக், ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் நூற்றுக்கணக்கில் மேலப்பாளையத்திலிருந்து திரண்டு வந்து சாலையிலமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களையும் எழுப்பியதால் கலெக்டர் அலுவலகமான கொக்கிரகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

- ராம்குமார்

சார்ந்த செய்திகள்