தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் தொடர் போராட்டங்களில் 13 பேர் பலியானார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம், ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என கடந்த 28ந் தேதி தெரிவிக்கப்பட்டு உள்ளது
.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்ட மன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் எதிர்ப்பு குழுவினர் கிருஷ்ணமூர்த்தி அரிராகவன் உள்ளிட்டோர் மற்றும் குமரெட்டியாபுரம் பண்டாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் ஆட்சியர் பொறுப்பு வீரப்பனிடம் மனுக்களை அளித்தனர் ஆட்சியர் (பொ) இவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்கள் போராட்டத்தையொட்டி காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபட்டனர்
.
இது குறித்து போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைத்தால் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து ஆலைக்கு ஆதரவாக நாடகமாட கூடாது. தற்போது நடந்து வரும் சம்பவங்கள் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆலை திறகப்படுமானால் தூத்துக்குடி மக்கள் வாழவே முடியாத நகரமாகிவிடும். ஆலையை திறக்க விட மாட்டோம். இதற்காக தூத்துக்குடி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் மாவட்டம் மட்டுமல்லாது போராட்டத்தை மாநில அளவில் விரிவு படுத்துவோம் என்றனர்.