தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை கரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆக்சிஜன் உற்பத்தியை தற்காலிகமாக மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளையுடன் (31/07/2021) நிறைவடைய உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், "தமிழகத்தில் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இந்த ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தது. இதற்கிடையில், இந்த இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பாக கோரிக்கை வைத்தார். மேலும், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் ஸ்டெர்லைட், ஆக்சிஜன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்; வழக்கை விசாரணைக்கு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், "தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை. எனவே, வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்க்கிறோம்" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடரும் எனக் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.