புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளித்தலைமை ஆசிரியை ஜெ.சாந்தி தலைமை வகித்தார். விழாவில் முன்னாள் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சிற்றம்பலம் கலந்து கொண்டு பேசியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இவ்வுலகில் வாழும் நாம் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து விலங்குகள், தாவரங்கள் மற்றும் இதர வாழ்வுயிர்களும் இப்புவியில் வாழ பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கப் பாடுபட வேண்டும்.
மட்கும் குப்பையை பிரித்து மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை பெருக்க வேண்டும். சுற்றுச்சூழலிற்கும், பிற உயிரினங்களுக்கும் தீங்கு அளிக்கும் எந்தவொரு பொருளுக்கும் இம்மண்ணில் இடம் தரக் கூடாது. பொறுப்புள்ள ஒரு மனிதனாய் சுற்றுச் சூழலுக்கு எந்த வித களங்கமும் மாசும் ஏற்படாத வகையில் சமாதான சகவாழ்வினை மாணவர்களாகிய நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக சுற்றுச் சூழல் தின உறுதிமொழியை அனைத்து மாணவர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியர் ரோஜா நன்றி கூறினார்.
Published on 05/06/2018 | Edited on 05/06/2018