இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு வேளாண்மை திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார்,ஆர்.பி.உதயக்குமார், பா.பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் 'SUMEET URBAN SERVICES' என்ற நிறுவனம் 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கும். சென்னையில் 92 வார்டுகளில் 16,621 தெருக்களில் திடக்கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபடும். வீடு, வீடாக குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெறாதது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், "முதல்வர் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை திட்ட நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வர் பெயர் இருக்கும்; இது சென்னை மண்டல அளவிலான நிகழ்ச்சி. செயற்குழு தீர்மானப்படி கட்சி வேலைகளை செய்ததால் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை" என்றார்.