மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மாநில அளவிலான கபாடி போட்டியை நடத்தியுள்ளனர் திமுகவினர்.
மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் இளையபெருமாள் தலைமையில் நடந்த இந்தப் போட்டியைத் திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் டாக்டர் சேயோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, துவங்கிவைத்து, போட்டியைக் கண்டு ரசித்தனர். போட்டியைக் காண பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
மூன்றுநாள் போட்டியாக நடந்த இந்தப் போட்டிக்கு முதல் பரிசு முப்பதாயிரம், மற்றும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள கேடயமும் வழங்கி கவுரவித்தனர். அந்தப் பரிசுகளைத் திமுக மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இளையபெருமாள் வழங்கினார். பிரம்மாண்டமான போட்டியைக் கவுன்சிலரும் விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான கராத்தே ஜெயக்குமார், கேசிங்கன் ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ், மணல்மேடு திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஶ்ரீநாத் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தி முடித்துள்ளனர்.
தமிழ் மண்ணில் தமிழர்களால்ள்உருவாக்கப்பட்ட வீர விளையாட்டுகளுள் ஒன்றுதான் கபாடி. இப்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்பட்டாலும் உருவான தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் விளையாட்டாகவே சுருங்கிவிட்டது. கபாடி போன்ற பண்பாடு, கலாச்சாரம் கலந்த வீர விளையாட்டுக்களை உயிர்ப்பிக்கும் விதமாகத்தான் தற்போது அழிவின் விளிம்பில் இருந்த சிலம்பத்தை மீட்டெடுக்கும்விதமாக தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு செய்திருக்கிறார்.
கபாடி, சிலம்பம், கராத்தே என பன்முக வீரரும் பயிற்சியாளருமான மணல்மேட்டைச் சேர்ந்த சென்சாய் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்டோம், "கை-பிடி என்கிற வார்த்தை மறுவியே கபடியாக மாறியுள்ளதாக கருதுகிறோம். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் இந்தக் கபடி விளையாட்டு. கபாடி பாடிவரும் ரெய்டர் என்கிற ஒற்றை ஆளைக் காளையாக கருதி, அவரை எதிரணியில் இருக்கும் ஏழு வீரர்களும் அடக்குவர். பின்னர் இந்தப் பயிற்சி, வீர விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கிறது. புத்தர் உள்ளிட்ட பல இளவரசர்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடியதாகவே கூறுகின்றனர்.
ஆனால் தமிழனின் அடையாளமான சிலம்பம், கபாடி போன்ற வீரவிளையாட்டுகள் அழிந்துவரும் நிலைக்குச் சென்றுவிட்டது. அதோடு விளிம்புநிலையில் வாழும் மக்கள் மட்டுமே கொண்டாடும், விளையாடும் விளையாட்டுபோலவே மாற்றிவிட்டனர். இதற்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மேல்தட்டு மக்களும், கபாடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை அடிதட்டு மக்களுக்கானதுமாகவே மாற்றிவிட்டனர். பொங்கல் விழாவின்போது ஒவ்வொரு கிராமங்களிலும் கபாடி, சிலம்ப போட்டிகள் நடக்கும். ஆனால், சமீப காலமாக காவல்துறையினரின் அனுமதியில்லாமல் முடங்கிவிட்டது. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் தளபதியார் பிறந்தநாளில் கபாடி போட்டி நடத்தினோம், இந்த ஆண்டு முதல் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளிலும் விழாவாக கபாடி போட்டி மிக விமரிசையாக நடத்தி முடித்துள்ளோம். மதுரை, சென்னை, திருச்சி, சேலம் என பல மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வந்து கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்று சென்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய மனநிறைவைக் கொடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
அமெச்சூர் கபடி கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், திமுக பிரமுகரும், பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருபவருமான மயிலாடுதுறை ரஜினியிடம் கேட்டோம், "1921இல் கபடி விளையாட்டிற்கான கமிட்டி மஹாராஷ்ட்ராவில் உருவாக்கப்பட்டது. 1950இல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு 1972இல் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பாக மாற்றப்பட்டது. 1980இல் முதன்முதலாக ஆசிய கபடி போட்டி நடத்தப்பட்டு, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் கபடி உலக கோப்பை 2004இல் நடைபெற்றது. இந்தியா முதல் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதுவரை இந்தியா 8 முறை உலக சாம்பியன் ஆகியுள்ளது.
கபடியில் இந்திய பெண்களும் சளைத்தவர்களல்ல என்பதற்குச் சான்றாக 2005இல் மகளிருக்கான ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்தினர். 2012இல் நடைபெற்ற மகளிருக்கான முதல் கபடி உலகக் கோப்பையை வென்று அசத்தினர். இதுவரை மூன்றுமுறை உலக சாம்பியன் வென்றுள்ளனர் நம் இந்திய சகோதரிகள். அனைத்து வகை கபடி போட்டிகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இன்னும் மெருகேற்றும் விதமாக தமிழக முதல்வரின் விளையாட்டு குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. இதுபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் கபடி, சிலம்ப போட்டிகள் நடத்தபட வேண்டும். சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.