அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத் தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதுபோல், அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனத் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில், கரோனா ஊரடங்கு காரணமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழு, சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. திறமையயான, புதுமையான முறையில் தேர்வை நடத்தலாம், தேர்வின் தரத்தை சமரசம் செய்யாமல், நேரத்தை இரண்டு மணிநேரமாகவோ, மூன்று மணிநேரமாகவோ ஆக்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சமூக இடைவெளியோடு, ஷிப்ட் முறையில் தேர்வுகளை நடத்தலாம். கல்வி நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வைத்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை, ஆஃப் லைன் மற்றும் ஆன் லைன் மூலம் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மாநில அரசு, பருவத்தேர்வை, இறுதித் தேர்வை நடத்தாமல், கடந்த தேர்வுகளை வைத்து மதிப்பெண் போட எந்த அதிகாரமும் கிடையாது. தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை தள்ளிவைக்க மாநில அரசுகள் கேட்டுப் பெறலாம் எனக் கூறியுள்ளது.