‘சாத்தூரிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தினத்தைப் புறக்கணித்தார்கள்.’ என நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வந்த செய்தி தவறானது என்று அந்தக் கல்லூரியின் பேராசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அக்கல்லூரியில் பணிபுரியும் 24 பேர் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், ‘சுதந்திர தின விழா, சாலை பாதுகாப்பு வார விழா, பொங்கல் விழா என எத்தனையோ நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினோம். அதுகுறித்த செய்திகள் எதுவும் வெளிவந்ததில்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டது. கிராமப்புற மாணவ, மாணவிகள் படிக்கும் இக்கல்லூரியின் தேவைகள் எதுவுமே செய்தியாக வெளிவந்ததில்லை. ஆனால், குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவில்லை என்ற செய்தி மட்டும் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.’ என்று சாத்தூர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினரைக் கண்டித்துள்ளனர்.
சாத்தூர் பத்திரிகையாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய மணிவண்ணன் “அக்கல்லூரியின் முதல்வர் முத்துகுமார் கல்லூரிக்கே சரியாக வருவதில்லை என்று மாணவர்கள் தரப்பில் குமுறலாகச் சொன்னார்கள். குடியரசு தின விழா குறித்த அறிவிப்போ, சுற்றறிக்கையோ அனுப்பவில்லை என்றார்கள். அதனால்தான், பேராசிரியர்களும் மாணவர்களும் குடியரசு தினத்தைப் புறக்கணித்ததாகவும் சொன்னார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், குடியரசு தினத்துக்கு மறுநாள் (27-ஆம் தேதி) திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவிகளில் 8 பேரை வைத்துக் கொடியேற்றி, இனிப்பு வழங்கியது படம் எடுத்து, நாங்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடி, மாணவர்களுக்குப் இனிப்பும் வழங்கினோம் என்பதற்கு இதோ போட்டோ ஆதாரம் என்று எங்களுக்கு (பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர்) அனுப்பி வைத்தார்கள். அது ஒரு ‘செட்-அப்’ நிகழ்ச்சி என்பது மாணவி சிரிக்கும் போட்டோவைப் பார்த்தாலே தெரியும். 850 பேர் படிக்கும் கல்லூரியில் வெறும் 8 மாணவிகளை வைத்து குடியரசு தினத்தைக் கொண்டாடினோம் எனச் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள எஸ்.குமராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் குடியரசு தினம் கொண்டாடப்படவில்லை. அதனால், ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் கல்வித்துறை அதிகாரி. சாத்தூரிலும் அரசுக் கல்லூரியில் குடியரசு தினம் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கத்தோடு செய்தி வெளியிட்டோம். அதைப்போய், சித்தரித்தோம் என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்.” என்று வேதனைப்பட்டார்.
அக்கல்லூரியின் முதல்வர் முத்துகுமாரை தொடர்புகொண்டு ‘என்ன நடந்தது?’ என்று கேட்டோம். . “எனக்கு உடல் நலமில்லை, இப்போது பேச முடியாது.” என்று லைனைத் துண்டித்தார்.
‘ஞாயிற்றுக்கிழமை என்றால் விடுமுறை நாளாயிற்றே! அன்றுதானா குடியரசு தினம் வரவேண்டும்?’ என்று நினைத்திருப்பார்கள் போலும்! தேசபக்தியை வெளிப்படுத்துவதிலுமா போலித்தனம்? வேறென்ன சொல்லமுடியும்? தேசிய உணர்வோடு உரக்கச் சொல்வோம்! ஜெய்ஹிந்த்!