தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வந்த நிலையில் நான்காவது நாளாக இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வெள்ளியாகுளத்தில் நீர் சூழ்ந்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இடரில் சிக்கியவர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கோவில் பகுதியில் இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேரேகால்புதூர், சடையன்குளம் பகுதி வெள்ள நீரால் நிரம்பி முழுவதுமாக ஏரி போல் காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் சரல்விளை, சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன்புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு, பேயன்குழி, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் கன்னியாகுமரியில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.