ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் வளாகத்தில் பல்வேறு ஆவணங்களை எரித்து அழித்துவிட்டதாக, புகைப்படங்களோடு வாட்ஸ்-ஆப்பில் தகவல் பரவ, அக்கோவிலின் செயல் அலுவலர் இளங்கோவனைத் தொடர்புகொண்டோம்.
“கோவில் ஆவணம் எதையும் நாங்கள் எரிக்கவில்லை. பழைய ஆவணங்களாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கூறுகிறது நன்னூல் சூத்திரம். நீண்ட காலமாகத் தேவையற்ற பழைய தாள்கள் இங்கே தேங்கிவிட்டன. குப்பையாகவே இருந்தாலும், கோவில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பேப்பரையும், கோவில் வளாகத்துக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்பது விதியாக உள்ளது. வதந்தி பரப்பியவர்கள் கூறுவதுபோல், எரிக்கப்பட்டவை ஆவணங்கள் என்றே வைத்துக்கொண்டாலும், கோவில் வளாகத்தில் வைத்து ஏன் எரிக்க வேண்டும்? வெளியில் எடுத்துச் சென்றுவிட முடியுமல்லவா? விதிபிரகாரம், கோவில் வளாகத்தில் எரிக்கப்பட்ட, ஒன்றுக்கும் ஆகாத குப்பைக் காகிதங்களைப் போய் ஆவணங்கள் என வெளிஉலகம் பேசுவது தவறான தகவல்.” என்று மறுத்தார்.
ஏதாவது ஒரு விஷயத்துக்குக் கண், காது, மூக்கு வைத்து, இட்டுக்கட்டிக் கதை திரித்துவிடுவதற்கு “இருக்கவே இருக்கின்றன வலைத்தளங்கள்..” என்று நல்மனம் கொண்டவர்கள், எரிச்சலுடன் புலம்புவது சரியாகத்தான் இருக்கிறது.