Skip to main content

“இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்” -  திண்டுக்கல் சீனிவாசன்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

Srinivasan has said that the AIADMK government led by EPS will be restored

 

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் என முன்னாள் அமைச்சர் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசும் போது, “மதுவை ஒழிப்பேன் என போலி வாக்குறுதியை கொடுத்து ஆட்சியை பிடித்தது திமுக அரசு. ஆனால் இப்போது மதுவை ஏடிஎம் மிஷினில் 24 மணி நேரமும் விநியோகம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் கண்டுபிடிப்பில் மதுவை விற்பனை செய்கிறது. விளையாட்டு மைதானம் திருமண மண்டபங்களில் இனி மது தாண்டவம் ஆடும் நிலை உள்ளது. மாணவர்கள் கஞ்சா, அபின் போதைக்கு அடிமையாகின்றனர். 24 மணி நேரமும் பார்கள் திறந்து தற்போது தமிழகத்தில் எப்போதும் சரக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

 

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்து கையெழுத்திடுவோம் என வாக்குறுதி கொடுத்து. ஆனால் இப்போது ரத்து செய்யும் கையெழுத்திடும் பேனாவை தொலைத்து விட்டு திமுக அரசு நிற்கிறது போல் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநரை மதிக்காமல் செயல்படுகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். சபரீசன் உதயநிதி ரூ.30,000 கோடி ஊழலை மறைக்கப் போராடுகிறார்கள். திமுகவில் மூத்த அமைச்சர்கள் 33வது வரிசையில் சட்டசபையில் பயத்துடன் அமர்ந்துள்ளனர். திமுகவின் அரசியல் போலி நாடகம் இனி எடுபடாது. முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் உழைப்பாளிகளின் வாழ்வும் செழிக்கும்” என்று கூறினார். 

 

இதில் திண்டுக்கல் மாமன்ற அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர். அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்