
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெருவில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அக்கிராம மக்கள் இறந்தவரின் உடலைப் புதைக்க, ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், வயல் வெளியைக் கடந்தும் சுடுகாட்டுக்குச் செல்லவேண்டிய நிலையுள்ளது. இதனால் ஊரில் யாரேனும் உயிரிழந்தால், 1 கிலோ மீட்டர் தூரம் வயலில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் நிலை, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.
மழைக்காலங்களில் அந்தப் பகுதிகளில் யாரேனும் இறந்தால், நடவுசெய்த வயலிலும், சேற்றிலும் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது. இறந்தவர் உடலை சேற்றில் எடுத்துச் செல்லும்போது சடலத்துடன் தடுமாறி விழும் சம்பவம் அடிக்கடி நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வைரம் என்பவர் நேற்று உடல்நிலைக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது உறவினர்கள் உடலை சுமந்து, நடவுசெய்து, அறுவடைக்குத் தயாராக இருந்த வயலில் இறங்கி, சுடுகாட்டில் அவரை அடக்கம் செய்தனர். கடந்த 50 ஆண்டு காலமாக, இப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், சுடுகாட்டிற்குச் செல்வதற்கு சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.