Skip to main content

முன்விரோதத்தால் நடந்த கொலை..! நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Srimushnam case one surrender in court police arrested another one

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொல்லத்தன்குருச்சி ஊரில் வசித்துவந்தவர் ராஜேந்திரன் (55). இவர், மைக் செட் கடை வைத்து நடத்திவந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரது மகள் ரஞ்சிதாவுக்கு அடுத்த மாதம் எட்டாம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 

 

இதற்கான திருமணப் பத்திரிகை அடித்து, கோயிலில் வைத்துப் படைத்துவிட்டு நேற்று முன்தினம் (23.08.2021) உற்றார் உறவினர்களுக்குப் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்களிடம் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகன்கள் சுந்தரராஜன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்து, ‘ஏன் இப்படி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடையூறு செய்யும் அளவில் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். 

 

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், தனது வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து வந்து ராஜேந்திரன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

 

இதுகுறித்து ராஜேந்திரனின் மகன் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணை செய்துள்ளனர். 

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரன் வீடும் அர்ஜுனன் வீடும் அருகருகே உள்ளது. இதில் ராஜேந்திரன் வீட்டில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் மற்றும் அதன் மட்டைகள் போன்றவை அர்ஜுனன் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால் ராஜேந்திரன் குடும்பத்தினர் மீது அர்ஜுனன் மகன்கள் கடும் கோபத்தில் இருந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம்போட்டு பேசியதாகக் கூறி முன் விரோதத்தை மனதில் வைத்து அர்ஜுனன் மகன்களில் ஒருவரான ராமகிருஷ்ணன், ராஜேந்திரனை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால் பயந்துபோன ராமகிருஷ்ணன், அவரது சகோதரர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.

 

ஸ்ரீமுஷ்ணம் போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடிவந்த நிலையில், சுந்தரராஜன் நேற்று பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சகோதரர் ராமகிருஷ்ணனை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்