கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டங்களில் வசித்து வந்த இலங்கை அகதிகளுக்கு 1994- 95 மற்றும் 1995- 96 ஆகிய ஆண்டுகளில் வீட்டுக்கடன் மற்றும் தொழில் கடன் வழங்குவது தொடர்பாக, அப்போது விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தாரர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் முறைகேடாக போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசு நிதியிலிருந்து ரூபாய் 50,58,000 கையாடல் செய்தது தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 13 நபர்கள் மீது கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2003 ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகை மீதான இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், கடலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி திருவேங்கட ஸ்ரீனிவாசன் நேற்று முன்தினம் (07.12.2019) தீர்ப்பளித்தார்.
அதில் ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திட்டக்குடி முன்னாள் தாசில்தார் வீர.செல்லையா, முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் பிச்சைப்பிள்ளை, விருத்தாசலம் தலைமையிடத்து துணை தாசில்தார் கோயில்பிள்ளை மற்றும் சதாசிவம் உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதையடுத்து ஊழல் குற்றவாளிகள் 4 பேரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.