Skip to main content

நீட் விலக்கு: அவசரச் சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பும் தமிழக அரசு..!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
நீட் விலக்கு: அவசரச் சட்டம் இயற்றி
மத்திய அரசுக்கு அனுப்பும் தமிழக அரசு..!


நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது தொடர்பாக தமிழத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு இயற்றிய 85 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து, உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. இதனால், காத்திருக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குள்ளானது.

இதற்கிடையில், ஒருவேளை தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரி அவசர சட்டம் இயற்றினால், அதற்கு ஒத்துழைப்ப்பு அளிக்க மத்திய அரசு தயார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த விலக்கு பொருந்தும். நிரந்தர விலக்கு அளிக்க முடியாது’ என்றார்.

இந்த கருத்தை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும் ஆதரித்திருந்தார். இதுதொடர்பாக, தமிழக முதல் அமைச்சருடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். இன்று இந்த அவசரச் சட்ட வரைவு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மத்திய அரசும் ஜனாதிபதியும் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவியர்களுக்கு 2017-18 கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்